ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது அவதூறு வழக்கு - பெங்களூரு கோர்ட்டு சம்மன்


ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது அவதூறு வழக்கு - பெங்களூரு கோர்ட்டு சம்மன்
x

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோருக்கு பெங்களூரு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மே 5-ந்தேதி நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. முந்தைய பா.ஜ.க. அரசு 40 சதவிகித ஊழலில் ஈடுபட்டதாகவும், நான்கு ஆண்டுகளில் 1.5 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாகவும் அந்த விளம்பரங்களில் கூறப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டு உண்மையல்ல எனக் கூறி பா.ஜ.க. மாநிலச் செயலாளர் எஸ்.கேசவபிரசாத் மே 9-ந்தேதி புகார் பதிவு செய்தார். காங்கிரஸ் கூறும் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை, பாரபட்சம் மற்றும் அவதூறு பரப்புவதாகவும், பா.ஜ.க.வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்றும் அவர் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.

எம்.பி, எம்.எல்.ஏ.களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோருக்கு பெங்களூரு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கின் விசாரணை 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் இந்த வழக்கில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story