கெஜ்ரிவால் கைது எதிரொலி; கேரளாவில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்


கெஜ்ரிவால் கைது எதிரொலி; கேரளாவில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
x

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை கண்டித்து கேரளாவில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.

இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், நேற்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பா.ஜ.க. அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




Next Story