டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்..!
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது.
புதுடெல்லி,
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆனால் தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகா அணைகளில் நீர் இல்லை என்றும், தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று (29-ம் தேதி) நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறும் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இதில் தமிழகத்தின் நிலை குறித்து எடுத்துக் கூறுவதோடு, காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற உத்தரவிடுமாறு தமிழக அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து, கன்னட அமைப்புகள் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநில எல்லைவரை மட்டுமே தமிழ்நாடு பதிவெண் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.