தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு: மண்டியாவில் விவசாயிகள் போராட்டம்
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் கே.ஆர்.எஸ். அணை முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு நகலை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி நதி நீர் பங்கீடு
கர்நாடகம், தமிழகம் இடையே காவிரி நதி நீர் பங்கிடப்பட்டு வருகிறது. வறட்சி காலத்தில் இந்த நீரை பங்கீட்டு கொள்வதில் இரு மாநிலங்கள் இடையே சிக்கல் நீடித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருந்தது. இருப்பினும் தமிழகத்திற்கு இந்த மாதம் 7-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட்டது. வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீர் வரை திறக்கப்பட்டு வந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இதற்கிடையே தமிழகம் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்கு வழங்க வேண்டிய நீரை திறக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதில் எதிர்மனு தாரரான கர்நாடக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின் படி தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டுள்ளோம். போதிய மழை இல்லாததால் கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் மொத்தம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது.
தண்ணீர் திறக்க உத்தரவு
இதைத்தொடர்ந்து நேற்று நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும், காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்கள் தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது.
இதற்கு கர்நாடக அரசியல் கட்சி தலைவர்களும், கர்நாடக விவசாயிகள் சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
போராட்டம்
இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை கண்டித்தும், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என வலியுறுத்தியும் நேற்று மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை முன்பு கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைகளில் கருப்பு துணி கட்டி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு நகலை எரித்து போராட்டம் நடத்தினர். மேலும் வாயில் அடித்துக் கொண்டும் தங்கள் எதிர்ப்பை நூதன முறையில் வெளிப்படுத்தினர்.
மண்டியா மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் நஞ்சுகவுடா, பூமித்தாய் போராட்ட சமிதி தலைவர் கிருஷ்ணேகவுடா ஆகியோர் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. மேலும் அவர்கள் போராட்டத்தின்போது கர்நாடக மாநில விவசாயிகளுக்கு நிரந்தரமாக அநியாயம் இழைக்கப்படுவதாகவும், இதை தடுக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். மேலும் தமிழக அரசு, மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கமிட்டனர்.
கோஷம் எழுப்பினர்
கர்நாடக மக்களுக்கு குடிநீர் வழங்கவே போதிய தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கூறுவது சரியல்ல, கர்நாடகத்தில் உள்ள தண்ணீர் பிரச்சினையை எடுத்துக்கூறி கோர்ட்டையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் நம்ப வைக்காமல் கர்நாடக அரசு மாநில மக்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
விவசாயிகளின் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி கே.ஆர்.எஸ். அணை மற்றும் அணை அருகில் உள்ள பிருந்தாவன் கார்டன் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அணைகளின் நீர்மட்டம்
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்படும் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்) மற்றும் கபினி அணைகளின் நேற்றைய நீர்மட்ட நிலவரம் பின்வருமாறு:-
124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 101.82 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,891 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 2,293 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2,273.77 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,630 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கபிலா ஆற்றில் பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.