கவர்னர் விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு..!!


கவர்னர் விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு..!!
x
தினத்தந்தி 12 Dec 2023 11:30 PM IST (Updated: 13 Dec 2023 5:51 AM IST)
t-max-icont-min-icon

அரசின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கும், அரசின் கோப்புகளுக்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது, புறக்கணிப்பதை அரசியல் சாசனத்திற்கு எதிரானது, தவறானது என அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.

முன்னதாக தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அந்த மசோதாக்கள் மீண்டும் ஒப்புதலுக்காக கவர்னருக்கு கடந்த நவ.18-ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மனுக்கள் கடந்த நவ. 19-ஆம் தேதி ஜனாதிபதி ஒப்புதலுக்காக கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பிவைத்தார். ஆனால் காலத்தை வீணடிப்பதற்காகவே கவர்னர் இவ்வாறான காரியங்களில் ஈடுபடுகிறார் என திமுக பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நாளை கவர்னருக்கு எதிரான வழக்கு மறுவிசாரணைக்கு வரும்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடந்த நவம்பர் 18-ஆம் தேதி சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை, கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், தற்போது நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story