உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் போல இமாசல பிரதேசத்திலும் மீண்டும் பா.ஜனதா அரசு அமைய வேண்டும் - பிரதமர் மோடி


உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் போல இமாசல பிரதேசத்திலும் மீண்டும் பா.ஜனதா அரசு அமைய வேண்டும் - பிரதமர் மோடி
x

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களைப்போல இமாசல பிரதேசத்திலும் மீண்டும் பா.ஜனதா அரசு அமைய வேண்டும் என்பதை மனதில் வைக்குமாறு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

காணொலி மூலம் உரை

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்க ஆளும் பா.ஜனதா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி மாநிலத்தில் தேர்தல் பிரசார பணிகளை பா.ஜனதா முடுக்கி விட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக மாண்டியில் நேற்று பா.ஜனதாவின் இளைஞரணி கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் நேரடியாக பங்கேற்க இருந்த அவர், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் செல்ல முடியாததால் பயணத்தை ரத்து செய்தார். பின்னர் காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆளுங்கட்சியை மாற்றினர்

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் முன்பெல்லாம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆளுங்கட்சியை மாற்றுவதை வாக்காளர்கள் கடைப்பிடித்து வந்தனர். ஆனால் அந்த நடைமுறையை இப்போது அவர்கள் நிறுத்தி விட்டனர். பா.ஜனதாவை தொடர்ந்து ஆளுங்கட்சியாக தேர்வு செய்கின்றனர்.

இதைப்போல இமாசல பிரதேசத்திலும் மீண்டும் பா.ஜனதா அரசு அமைய வேண்டும் என்பதை மக்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் பா.ஜனதாவால் மட்டுமே நிலையான அரசை கொடுக்க முடியும். மேலும் மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லவும் முடியும்.

முன்னதாக மத்தியிலும் பல ஆண்டுகளாக கூட்டணி அரசு அமைந்து வந்தது. இது பாதியில் கவிழ்ந்து விடும் என உலக மக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தி வந்தது.

வலுவான அடித்தளம்

ஆனால் 8 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 2014-ல், ஒரு வலிமையான மற்றும் நிலையான அரசுக்காக மக்கள் ஓட்டளித்தனர். இதன் மூலம் நிலையான பணிகள் மற்றும் கொள்கைகள் என்ற கலாசாரம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஒரு வலுவான அடித்தளம் இப்போது தயாராக உள்ளது. அத்துடன் இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் ஒரு சாதாரண நபரும் அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளார். அதனால்தான் முழு உலகமும் இப்போது இந்தியாவுடன் இணைக்கமாக செல்ல ஆர்வமாக உள்ளது.

இளைஞர்களுக்கு அதிகபட்ச பிரதிநிதித்துவத்தை வழங்கிய கட்சி பா.ஜனதா தான். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் கனவை அவர்கள் நிறைவேற்றுவார்கள்.

ரூ.14 ஆயிரம் கோடி கடன்

முத்ரா திட்டத்தின் கீழ் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு இளைஞர்களுக்கு கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையை மேம்படுத்துவதன் மூலம் இளைஞர்களும் பலன்களைப் பெறுகிறார்கள்.

கொரோனா தடுப்பூசி போடுவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குறிப்பாக வெளிநாட்டவர்கள் இமாசல பிரதேசத்துக்கு வருவதை பாதுகாப்பானதாக உணர்கிறார்கள்.

சிர்மார் மாவட்டத்தை சேர்ந்த ஹதீ பிரிவினருக்கு பழங்குடியினர் அந்தஸ்தை மத்திய அரசு வழங்கி இருக்கிறது.

இமாசல பிரதேசத்துக்கு மத்திய அரசு தாராளமான நிதி உதவி அளித்து உள்ளது. எனது வெளிநாட்டு பயணங்களின் போது மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் அங்கெல்லாம் காட்சிப்படுத்தப்பட்டன.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


Next Story