விமான நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க எவ்வளவு பணம் வாங்கினீர்கள்-ராகுல் கேள்வி


ராகுல் காந்தி, அதானி நிறுவன விளம்பரம், லக்னோ விமான நிலையம்
x

லக்னோ விமான நிலையத்தில் இருந்த அதானி நிறுவனத்தின் விளம்பரங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தி நேற்று அந்த தொகுதியில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் முதல் முறையாக பங்கேற்றார். அதற்காக நேற்று காலை லக்னோ விமான நிலையத்துக்கு ராகுல் காந்தி வருகை தந்தார். அப்போது லக்னோ விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,

"இன்று நான் லக்னோ விமான நிலையத்தில் இருக்கிறேன். லக்னோ, மும்பை, அகமதாபாத், மங்களூரு, கவுகாத்தி, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் வரை அனைத்து விமான நிலையங்களையும் 50 ஆண்டுகளுக்கு பிரதமர் தனது 'டெம்போ நண்பர் அதானி'யிடம் ஒப்படைத்துள்ளார். இதற்கு எத்தனை டெம்போவில் பணம் வாங்கினீர்கள் என்பதை நரேந்திர மோடி பொதுமக்களிடம் சொல்வாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அதானி, அம்பானி குறித்து பேசாமல் இருக்க காங்கிரஸ் டெம்போக்களில் பணம் பெற்றதாக பிரதமர் மோடி எழுப்பிய குற்றச்சாட்டை குறிப்பிட்டு, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் விசாரணையை எப்போது தொடங்க போகிறீர்கள்? சீக்கிரம் விசாரணையை ஆரம்பியுங்கள். இதனை தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்த அதானி நிறுவனத்தின் விளம்பரங்களை சுட்டிக்காட்டி அவர் விமர்சனம் செய்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடி கடந்த 7ம் தேதி தேர்தல் பிரசாரத்தின்போது, "காங்கிரஸ் கட்சி அம்பானி-அதானி குறித்து விமர்சிப்பதை ஏன் திடீரென நிறுத்திவிட்டது? அம்பானி-அதானியிடம் இருந்து டெம்போ வாகனங்களில் கருப்பு பணத்தை பெற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சி ஒப்பந்தம் செய்து கொண்டதா? என்பதை மக்களிடம் ராகுல் காந்தி விளக்க வேண்டும்" என்று விமர்சித்திருந்தார். இது காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story