சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யக்கோரி பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்
பாகிஸ்தானின் நடவடிக்கைகள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தத்தின் விதிகளை மீறும் வகையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சிந்து நதி நீரை பகிர்ந்து கொள்வதற்காக கடந்த 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 'சிந்து நதிநீர் ஒப்பந்தம்' கையெழுத்தானது. இந்தியாவின் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் இதில் கையெழுத்திட்டார்கள். அவர்களுடன் மூன்றாவது சாட்சியாக உலக வங்கி இதில் கையெழுத்திட்டது.
இதன்படி சிந்து நதியும், அதன் துணை நதிகளும் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டது. கிழக்கு பகுதி நதிகளின் நீரை இந்தியாவும், மேற்கு பகுதி நதிகளின் நீரை பாகிஸ்தானும் முழுமையாக பயன்படுத்த உரிமை வழங்கப்பட்டது. கிழக்கு பகுதி ஆறுகளின் நீரை இழந்ததற்காக பாகிஸ்தானுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம் தொடர்பான தரவுகளை பரிமாறி கொள்ளவும், ஒத்துழைக்கவும், 'சிந்து ஆணையம்' அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்கு இரு நாடுகள் சார்பிலும் ஒரு ஆணையர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யக்கோரி பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் கடந்த ஜனவரி 25-ந்தேதி அந்தந்த ஆணையர்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் நடவடிக்கைகள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தத்தின் விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், இதன் காரணமாக ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான தகுந்த அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது என்றும் சிந்து நதிநீர் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.