அதானி உள்ளிட்ட தொழில் அதிபர்களுக்காக மட்டுமே உழைக்கிறார்; பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு


அதானி உள்ளிட்ட தொழில் அதிபர்களுக்காக மட்டுமே உழைக்கிறார்; பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x

பிரதமர் மோடி, அதானி உள்ளிட்ட சில தொழில் அதிபர்களுக்காக மட்டுமே உழைப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சத்தீஷ்காரில் பிரசாரம்

சத்தீஷ்கார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டது. அந்தவகையில், நவ ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு தனது பிரசாரத்தை தொடங்கினார்.

இதில் உரையாற்றும்போது அதானி விவகாரத்தை முன்வைத்து பிரதமர் மோடி மீது கடுமையாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அதானி விவகாரம்

உலகின் மிகப்பெரிய பொருளாதார பத்திரிகை ஒன்று சமீபத்தில் அதானி குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. பிரதமர் மோடிக்கு நெருக்கமான அவர், இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை அபகரித்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று தனது பங்குகளின் மதிப்பை உயர்த்த பயன்படுத்தினார் என அதில் கூறப்பட்டு உள்ளது. யாருடைய பணம் வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது? அதானிக்கு எதிராக விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிடாதது ஏன்? ஏனெனில் அந்த விசாரணையின் விளைவு அதானிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாது, வேறு யாரோ ஒருவருக்குதான் பிரச்சினையை உருவாக்கும்.

தொழில் அதிபர்களுக்காக உழைப்பு

பா.ஜனதாவும், பிரதமர் மோடியும் அதானி மற்றும் சில தொழில் அதிபர்களுக்காக மட்டுமே உழைக்கின்றனர். ஆனால் கர்நாடகா, இமாசலபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்கள் மட்டுமின்றி வருகிற தேர்தலில் தெலுங்கானா, மத்திய பிரதேசங்களில் அமைக்க இருக்கும் எங்கள் அரசுகள் ஏழைகளின் அரசாகவே உள்ளன, அதானியின் அரசாக அல்ல. இதைப்போல பா.ஜனதா நாடு முழுவதும் வெறுப்பையும், வன்முறையையும் பரப்பி வருகிறது. ஆனால் காங்கிரசோ அந்த வெறுப்பு சந்தையில் அன்பு கடையை திறக்க உழைத்து வருகிறது.

வேலையில்லா திண்டாட்டம்

பழங்குடி மக்களை ஆதிவாசி என்ற அழைப்பதற்கு பதிலாக பா.ஜனதா வனவாசி என்று அழைக்கிறது. ஏனெனில் இந்த மக்கள் காடுகளிலேயே வசிக்க வேண்டும் என்றே விரும்புகிறது. அங்கிருந்து வெளியேறி பல்வேறு துறைகளில் பணியாற்றும் அவர்களது கனவை நிறைவேற்ற விரும்பவில்லை.

அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்தான் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக இருக்கிறது. நாட்டின் பொருளாதார முதுகெலும்பை பா.ஜ.க. சிதைத்தது. ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு வணிகர்கள் வீழ்ச்சியடைந்தனர்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.


Next Story