ரெயில்களுக்கு மறைந்த தலைவர்கள், ஆறுகளின் பெயர்களை சூட்ட நளின்குமார் கட்டீல் எம்.பி. வலியுறுத்தல்


ரெயில்களுக்கு மறைந்த தலைவர்கள், ஆறுகளின் பெயர்களை சூட்ட நளின்குமார் கட்டீல் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 July 2023 6:45 PM GMT (Updated: 22 July 2023 6:45 PM GMT)

மக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் ரெயில்களுக்கு மறைந்த தலைவர்கள், ஆறுகளின் பெயர்களை சூட்ட வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு, நளின்குமார் கட்டீல் எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.

பெங்களூரு:

மக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் ரெயில்களுக்கு மறைந்த தலைவர்கள், ஆறுகளின் பெயர்களை சூட்ட வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு, நளின்குமார் கட்டீல் எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.

கடிதம்

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் எம்.பி. மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவிற்கு நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான ரெயில்கள் புறப்படுகின்றன. மேலும் ஏராளமான ரெயில்கள் வந்து சேருகின்றன. அதுமட்டுமின்றி பல ரெயில்கள் மங்களூரு ரெயில் நிலையம் வழியாக வந்து செல்கின்றன. இதனால் ரெயில் பயணிகள் எளிதில் ரெயில்களை அடையாளம் காணும் வகையில் அவற்றுக்கு மக்கள் வசிக்கும் வட்டார அளவிலான பெயர்களை சூட்ட வேண்டும். அதாவது மக்கள் வசிக்கும் வட்டாரம், இடத்தின் பெயர் ஆகியவற்றை ரெயில்களுக்கு சூட்ட வேண்டும். எடுத்துக்காட்டாக மங்களூரு வழியாக செல்லும் திருவனந்தபுரம்-மும்பை எல்.டி.டி. இடையேயான ரெயிலுக்கு நேத்ராவதி எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

அதுபோல் எர்ணாகுளம்-ஹசரத் நிஜாமுதீன் ரெயிலுக்கு மங்களா லட்சதீப் எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அதன்படி கர்நாடக கடலோர மக்கள் வசிக்கும் இடத்தின் பெயர், ஆறுகள், பிரசித்திபெற்ற இடங்களின் பெயர், இங்குள்ள மறைந்த தலைவர்களின் பெயர்களை ரெயில்களுக்கு சூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அது இங்குள்ள மக்களுக்கு பெருமை அளிக்கும் விஷயமாக இருக்கும். அதுமட்டுமின்றி மக்கள் எளிதில் அந்த ரெயில்களை அடையாளம் காணவும் முடியும்.

வலியுறுத்தல்

அதன்படி பெங்களூரு-மைசூரு-மங்களூரு ரெயிலுக்கு மங்களாதேவி எக்ஸ்பிரஸ் என்றும், மங்களூரு சென்ட்ரல்-மடகோன் ரெயிலுக்கு சவுபர்னிகா எக்ஸ்பிரஸ் என்றும், மங்களூரு சென்ட்ரல்-கோவை சந்திப்பு இன்டர்-சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு துளுநாடு இன்டர்-சிட்டி எக்ஸ்பிரஸ் என்றும், எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல்-கோவை சென்ட்ரல் ரெயிலுக்கு தேஜஸ்வினி எக்ஸ்பிரஸ் என்றும் பெயர் சூட்ட வேண்டும்.

அதுமட்டுமின்றி சென்னை எழும்பூர்-மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு சந்திரகிரி எக்ஸ்பிரஸ் என்றும், மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கராவளி எக்ஸ்பிரஸ் என்றும், மங்களூரு சந்திப்பு-விஜயாப்புரா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு ஹேமாவதி எக்ஸ்பிரஸ் என்றும், மங்களூரு சென்ட்ரல்-காச்சிகுட்டா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பல்குனி எக்ஸ்பிரஸ் என்றும் பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு நளின் குமார் கட்டீல் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Next Story