இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை: அண்ணன்-தம்பி குத்திக்கொலை


இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை: அண்ணன்-தம்பி குத்திக்கொலை
x

இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த அண்ணன்-தம்பி குத்திக்கொலை செய்யப்பட்டனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா காரிமணி கிராமத்தை சேர்ந்தவர் சோமப்பா. இவரது மகன் மாயப்பா கலேகொடி (வயது 22). அதே சவதத்தி தாலுகா துன்டனகொப்பா கிராமத்தில் வசித்து வருபவர் பகீரப்பா பாம்விகாலா (50). கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். மாயப்பாவும், அந்த இளம்பெண்ணும் அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில், பகீரப்பாவின் மகளை ஒரு தலையாக மாயப்பா காதலித்து வந்துள்ளார். இளம்பெண் எங்கு சென்றாலும், அவர் பின்னால் மாயப்பா சுற்றி திரிந்துள்ளார். அத்துடன் தன்னை காதலிக்கும்படி இளம்பெண்ணுக்கு மாயப்பா தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அந்த பெண் தனது தந்தை பகீரப்பாவிடம், கூறியுள்ளார்.

இதையடுத்து, காரிமணி கிராமத்திற்கு நேற்று பகீரப்பா சென்றார். அங்கு மாயப்பாவை சந்தித்து தனது மகள் பின்னால் சுற்றி திரிவதை நிறுத்தி கொள்ளும்படி கூறினார். ஆனால் அதற்கு மாயப்பா மறுப்பு தெரிவித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்த வாக்குவாதம் முற்றியது. அப்போது ஆத்திரமடைந்த பகீரப்பா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாயப்பாவை குத்தியுள்ளார்.

இதை பார்த்து மாயப்பாவின் சகோதரர் யல்லப்பா கலேகொடி அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் தனது சகோதரரை காப்பாற்ற, யல்லப்பா கலேகொடி ஓடி வந்தார். அப்போது பகீரப்பா, யல்லப்பா கலேகொடியையும் கத்தியால் கண்மூடித்தனமாக குத்தினார். இந்த தாக்குதலில் சகோதரர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இதை பார்த்த பகீரப்பா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்தநிலையில் சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ஓடி வந்து சகோதரர்கள் 2 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சகோதரர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாம்விகாலா போலீசார் விரைந்து சென்று சகோதரர்களின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது யல்லப்பா, பகீரப்பாவின் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்ததால் கோபம் அடைந்த அவர், சகோதரர்களை கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாம்விகாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவான பகீரப்பாவை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

1 More update

Next Story