மத்திய பிரதேசம்: இந்திய ஒற்றுமை யாத்திரையில் எழுந்த 'மோடி' கோஷம் - பதிலுக்கு ராகுல் காந்தி செய்த செயல்


மத்திய பிரதேசம்: இந்திய ஒற்றுமை யாத்திரையில் எழுந்த மோடி கோஷம் - பதிலுக்கு ராகுல் காந்தி செய்த செயல்
x

Image Courtesy : @INCIndia

ராகுல் காந்தியின் யாத்திரையின்போது பா.ஜ.க. தொண்டர்கள் ‘மோடி’, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷங்களை எழுப்பினர்.

போபால்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' மேற்கொண்டு வருகிறார். கடந்த சனிக்கிழமை அவரது யாத்திரை பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேச மாநிலத்திற்குள் நுழைந்தது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரை இன்று மத்திய பிரதேசத்தின் ஷாஜாபூர் நகரத்தை அடைந்தபோது, அங்கு திரண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்கள் 'மோடி, மோடி' என கோஷம் எழுப்பினர். இதைப் பார்த்ததும் ராகுல் காந்தி தனது யாத்திரை வாகனத்தை அவர்கள் அருகில் நிறுத்தினார்.

இதையடுத்து வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய ராகுல் காந்தி, அங்கு திரண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்களின் அருகில் சென்றார். அப்போது பா.ஜ.க. தொண்டர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷம் எழுப்பினர். அங்கிருந்த பா.ஜ.க. தொண்டர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு ராகுல் காந்தி மீண்டும் தனது வாகனத்தில் ஏறி யாத்திரையை தொடர்ந்தார். அப்போது வாகனத்தில் இருந்தவாறு பா.ஜ.க. தொண்டர்களை நோக்கி பறக்கும் முத்தம் கொடுப்பது போல் சைகை காட்டினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. நிர்வாகி முகேஷ் துபே, "நாங்கள் மோடி, ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்களை எழுப்பியபோது ராகுல் காந்தி தனது வாகனத்தில் இருந்து இறங்கி எங்களை நோக்கி வந்தார். அவரிடம் நாங்கள் அவரை வரவேற்பதாக கூறினோம். தொடர்ந்து அவருக்கு சில உருளைக்கிழங்குகளையும் வழங்கினோம்" என்று தெரிவித்தார்.


Next Story