மராட்டியம், இமாச்சல பிரதேசத்தில் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுக்கும் வாகன ஓட்டிகள்


மராட்டியம், இமாச்சல பிரதேசத்தில் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுக்கும் வாகன ஓட்டிகள்
x

பல்வேறு இடங்களில் வாகனங்களை இயக்காமல் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மும்பை:

நாட்டில் காலனித்துவ கால குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சட்டங்களில் பல்வேறு குற்ற செயல்களுக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சாலை விபத்துகளை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடும் டிரைவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது. இந்த சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சங்கத்தினர் மற்றும் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மராட்டியத்தின் நவி மும்பை பகுதியில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்களை கலைப்பதற்கு போலீசார் முயன்றனர். அப்போது ஒரு போலீஸ்காரரை டிரைவர்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்றும் போராட்டம் நீடிக்கிறது.

மராட்டியத்தின் பல்வேறு இடங்களில் வாகனங்களை இயக்காமல் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் முன்கூட்டியே வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக இன்று காலை முதலே பெட்ரோல் பங்குகளை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். அனைத்து முக்கியமான சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்திலும் இந்த நிலை காணப்படுகிறது.


Next Story