சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு
சொத்துக்குவிப்பு வழக்கில் தான் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்க தடை கோரி அமைச்சர் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி,
கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 36 லட்சம் சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2002-ல் வழக்குப்பதிவு செய்தது.
விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
தாமாக முன்வந்து விசாரணை
வழக்கை விசாரித்த வேலூர் கோர்ட்டு, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும், போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் கூறி பொன்முடியையும், அவரது மனைவியையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் இதுவரை மேல்முறையீடு செய்யாத நிலையில், குற்ற விசாரணைமுறைச் சட்டம் 397-வது பிரிவின்படி, விசாரணை கோர்ட்டுகளின் முடிவுகள் சரியா என்பதை ஆய்வுசெய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து மறுஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்தார்.
இந்த வழக்கு கடந்த ஆகஸ்டு 10-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, ஏன் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக 17 பக்கங்களில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி, தான் பார்த்ததிலேயே மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்ட வழக்கு என்பதாலேயே, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேல்முறையீட்டு மனு
இந்த நிலையில் தான் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததற்கு எதிராக அமைச்சர் பொன்முடி சார்பில் வக்கீல் தேவ்யானி குப்தா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஐகோர்ட்டு தாமாக முன்வந்து எடுத்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை கோரியுள்ளார்.