குடிபோதையில் திட்டியதால் மைத்துனரை கொலை செய்த நபர் கைது
குடிபோதையில் திட்டியதால் மைத்துனரை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் அந்தேரியின் புறநகர் பகுதியில் குடிபோதையில் திட்டியதால் மைத்துனரை கொலை செய்த 28 வயது இளைஞரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் லடு குமார் பாஸ்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது மைத்துனர் இந்திரஜீத் ராம்பிரகாஷ் பாஸ்வான் (வயது 48) சமீபத்தில் பீகாரில் இருந்து வேலை தேடி மும்பைக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, ராம்பிரகாஷ் அந்தேரியில் உள்ள கணேஷ் பந்தல்களை பார்வையிட்டு விட்டு லடு பாஸ்வானின் கடைக்கு வந்துள்ளார். குடிபோதையில் இருந்த ராம்பிரகாஷ், சில பிரச்சனைகளால் முன்னிட்டு லடு பாஸ்வானை கடுமையாக திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த லடு பாஸ்வான் இரும்பு கம்பியால் ராம்பிரகாசை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கொலைக்குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், லடு பாஸ்வானை கைது செய்தனர்.