ஆட்டோ டிரைவர் படுகொலை


ஆட்டோ டிரைவர் படுகொலை
x

மோட்டார் சைக்கிள் சாகச பிரச்சினையில் ஆட்டோ டிரைவரை படுகொலை செய்த வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஹாசன்:

மோட்டார் சைக்கிள் சாகச பிரச்சினையில் ஆட்டோ டிரைவரை படுகொலை செய்த வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மோட்டார் சைக்கிள் சாகசம்

ஹாசன் நகரை சேர்ந்தவர் சுமந்த் (வயது 20). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் கவேனஹள்ளி பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்தார். அந்தப்பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை பார்த்த அந்தப்பகுதியில் இருந்த வாலிபர்கள், சுமந்தை பிடித்து சாகசம் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சுமந்த்துக்கும், அந்தப்பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் அவர்கள் சுமந்தை தாக்கியதாக தெரிகிறது.

கொலை

இந்த நிலையில் அங்கிருந்து சென்ற சுமந்த், இரவில் தனது நண்பர்கள் 2 பேருடன் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கவேனஹள்ளிக்கு வந்து தன்னை தாக்கிய வாலிபர்களுடன் தகராறு செய்தார். மேலும் அவர்களை சுமந்த் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கினார்கள். அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த பிரஜ்வல் மற்றும் சில வாலிபர்கள் சுமந்திடம் இருந்து கத்தியை பறித்து அவரை சரமாரியாக குத்தினர்.

இதில் மார்பில் பலத்த கத்திக்குத்து காயமடைந்த சுமந்த், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பிரஜ்வல் உள்ளிட்ட சில வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

வலைவீச்சு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஹாசன் படாவனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கொலையான சுமந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மோட்டார் சைக்கிள் சாகச பிரச்சினை கொலையில் முடிந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story