பெங்களூரு-நாகர்கோவில் ரெயில் வழித்தடம் மாற்றம்


பெங்களூரு-நாகர்கோவில் ரெயில் வழித்தடம் மாற்றம்
x
தினத்தந்தி 18 Nov 2022 6:45 PM GMT (Updated: 18 Nov 2022 6:46 PM GMT)

பராமரிப்பு பணிகள் எதிரொலியாக பெங்களூரு-நாகர்கோவில் ரெயில் உள்பட பல ரெயில்களின் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பெங்களூரு:

பராமரிப்பு பணிகள் எதிரொலியாக பெங்களூரு-நாகர்கோவில் ரெயில் உள்பட பல ரெயில்களின் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பராமரிப்பு பணிகள்

சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட ரெயில் பாதையில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த வழியாக இயக்கப்பட்டு வரும் ரெயில்களின் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூரு -நாகர்கோவில் விரைவு ரெயில்(வண்டி எண்:17235) அடுத்த மாதம்(டிசம்பர்) 1 மற்றும் 2-ந் தேதிகளில் ராசிபுரம், நாமக்கல் ரெயில் நிலையங்களுக்கு செல்லாமல் நிற்காமல் சேலம், ஈரோடு, கரூர் வழியாக இயக்கப்படும். இதேபோல் திருநெல்வேலி-தாதர் விரைவு ரெயில்(வண்டி எண்:11022) 1 மற்றும் 2-ந் தேதிகளில் நாமக்கல் ரெயில் நிலையத்தில் நிற்காது.

மேலும் அந்த ரெயில் கரூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. மேலும் நாகர்கோவில்-பெங்களூரு(வண்டி எண்:17236) ரெயில் வருகிற 30-ந் தேதியும், மறுநாள் டிசம்பர் 1-ந் தேதியும் நாமக்கலில் நிற்காமல் இயக்கப்பட உள்ளது. தாதர்-திருநெல்வேலி(வண்டி எண்:11021) ரெயில் வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளிலும், திருச்சி-ஸ்ரீகங்காநகர் ஹம்சாபர் விரைவு (வண்டி எண்:22498) ரெயில் அடுத்த மாதம் 2-ந் தேதியும் நாமக்கல் ரெயில் நிலையத்தில் நிற்காது.

மேலும் யஷ்வந்தபுரம்-புதுச்சேரி விரைவு(வண்டி எண்: 16573) ரெயில் 2-ந்தேதி அத்தூர், சின்னசேலம் ரெயில் நிலையங்களில் நிற்காது. மேலும், இந்த ரெயில் சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, விருதாச்சலம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ரெயில்கள் ரத்து

இதேபோல் சில ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூரு-காரைக்கால் விரைவு ரெயில்(16529) அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக காரைக்கால்-பெங்களூரு விரைவு ரெயில்(வண்டி எண்:16530) மேற்கண்ட நாட்களில் ரத்தாகிறது. இதேபோல் பெங்களூரு-எர்ணாகுளம் அதிவிரைவு ரெயில்(வண்டி எண்: 12677), எர்ணாகுளம்-பெங்களூரு அதிவிரைவு ரெயில் (வண்டி எண்:12678), பெங்களூரு-கோயம்புத்தூர் உதய் விரைவு ரெயில்(வண்டி எண்: 22665), மறுமார்க்கமாக கோயம்புத்தூர்-பெங்களூரு(வண்டி எண்: 22666) ஆகிய ரெயில்கள் அடுத்த மாதம் 3-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story