'சிறப்பு கூட்டத்தொடருக்கு முன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது இல்லை' - சோனியா காந்தியின் கடிதத்திற்கு மத்திய அரசு பதில்


சிறப்பு கூட்டத்தொடருக்கு முன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது இல்லை - சோனியா காந்தியின் கடிதத்திற்கு மத்திய அரசு பதில்
x
தினத்தந்தி 6 Sep 2023 3:08 PM GMT (Updated: 6 Sep 2023 3:28 PM GMT)

பாரம்பரிய நடைமுறையில் சோனியா காந்தி கவனம் செலுத்தவில்லை என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியிருந்தார்.

அதில், "நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு விவாதிக்க வேண்டும். விவாதப்பொருள் பட்டியல் தரவில்லை. அதில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் சேர்க்க வேண்டும். வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரம், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து சிறப்பு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மணிப்பூர் வன்முறை குறித்தும் பேச வேண்டும். சிறப்பு கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் கட்சிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை" என்று தனது கடிதத்தில் சோனியா காந்தி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சோனியா காந்தியின் கடிதத்திற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;-

"பாரம்பரிய நடைமுறையை பின்பற்றி சிறப்பு கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் பாரம்பரிய நடைமுறையில் கவனம் செலுத்தவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடரை அழைப்பதற்கு முன், அரசியல் கட்சிகளுடன் எந்த பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படுவதில்லை, பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுவதில்லை.

ஜனாதிபதி மூலம் அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர், கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது. அதில் பிரச்சினைகள் மற்றும் பணிகள் விவாதிக்கப்படுகின்றன."

இவ்வாறு பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.


Next Story