ஒடிசா: ஜீரோ இறப்பு வாரத்தின் முதல் நாளில் 8 பேரை பலி வாங்கிய விபத்து


ஒடிசா: ஜீரோ இறப்பு வாரத்தின் முதல் நாளில் 8 பேரை பலி வாங்கிய விபத்து
x

இந்த வாரம் முழுவதும் பாதுகாப்பான சாலை பயணம் தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

புவனேஸ்வர்:

அசாம் மாநிலத்தில் சாலை விபத்துகள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக குளிர்காலத்தின் துவக்கத்தில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் ஜீரோ இறப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

குளிர்காலத்தின் துவக்கத்தில் அதிக அளவிலான மக்கள் வாகனங்களில் சுற்றுலா செல்வதால் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. எனவே, இந்த காலகட்டத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரம் (டிசம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை) 'ஜீரோ இறப்பு வாரமாக' கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த வாரம் முழுவதும் பாதுகாப்பான சாலை பயணம் தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த வாரத்தில் விபத்தினால் உயிரிழப்பு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்யவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஜீரோ இறப்பு வாரத்தின் முதல் நாளான இன்று கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்து அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்தது.

பாலிஜோடி கிராமத்தின் அருகே, கோவிலுக்குச் சென்றவர்களின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கேள்விப்பட்ட முதல் மந்திரி நவீன் பட்நாயக், தனது கவலையை தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


Next Story