ஒடிசாவில் வருமான வரி சோதனை; மதுபான நிறுவனத்தில் சிக்கிய ரூ.250 கோடி


ஒடிசாவில் வருமான வரி சோதனை; மதுபான நிறுவனத்தில் சிக்கிய ரூ.250 கோடி
x
தினத்தந்தி 8 Dec 2023 6:00 PM GMT (Updated: 8 Dec 2023 7:33 PM GMT)

மதுபான நிறுவன இடங்களில் பிடிபட்ட தொகை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என ஒடிசா மாநில பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் உள்ள பெரிய நாட்டு மதுபான தயாரிப்பு நிறுவனம் பால்தியோ சாகு. இந்த நிறுவனத்துக்கு அதன் வினியோகஸ்தர்கள், விற்பனை முகவர்கள் பெருந்தொகையை செலுத்தியுள்ளதாகவும், அது கணக்கில் காட்டப்படவில்லை என்றும் வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து குறிப்பிட்ட மதுபான நிறுவனத்தின் ஆலை, அலுவலகம் மற்றும் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த புதன்கிழமை திடீர் அதிரடி சோதனையை தொடங்கினர். ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

நேற்று 3-வது நாளாக தொடர்ந்த சோதனையில், ஒடிசா சுதபாடா நகரில் உள்ள அந்த மதுபான நிறுவனத்தின் அலுவலகத்தில், ரூ.200 கோடி ரொக்கப் பணம் பிடிபட்டது. மதுபான நிறுவனத்துக்குச் சொந்தமான பிற இடங்களில் சுமார் ரூ.50 கோடி சிக்கியது. அங்கெல்லாம் அலமாரிகளில் செங்கற்களை போல கட்டு கட்டாக அடுக்கப்பட்டிருந்த பணத்தை பார்த்து வருமான வரி அதிகாரிகளே மலைத்துப் போயினர். அவற்றை பெரிய பெரிய பைகளில் எடுத்து அடுக்க அடுக்க, அந்த பணி நீண்டுகொண்டே போனது. சுமார் 160 பைகளில் அடுக்கப்பட்ட ரொக்கத்தொகை ரூ.250 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில் பைகளில் இருந்த ரூ.20 கோடி பணம்தான் எண்ணி முடிக்கப்பட்டது. மொத்தம் 36 பணம் எண்ணும் எந்திரங்களை நிறுத்தாமல் பயன்படுத்தியும், பணக் கட்டுகளை எண்ணி முடிக்க இயலாமல் வருமான வரி அதிகாரிகள் திணறிப்போயினர். தொடர்ந்து பணத்தை எண்ணும் பணி நடைபெற்றுவருகிறது. ஒடிசாவில் இதுவரையில் நடந்த வருமான வரித்துறை சோதனைகளில் பிடிபட்ட அதிகமான தொகை இதுதான். இந்த சோதனை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குறிப்பிட்ட மதுபானம் நிறுவனமும் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

அந்த மதுபான நிறுவனத்துடன் ஒடிசாவின் ஆளும் பிஜு ஜனதா தள அரசியல்வாதிகளுக்கும், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி. ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வருமான வரி சோதனை தொடர்பான செய்தியை இணைத்து 'எக்ஸ்' தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'நாட்டு மக்கள், குவிந்து கிடக்கும் இந்த பணத்தை பார்த்துவிட்டு, பின்னர் 'நேர்மை' குறித்து அந்த தலைவர்கள் பேசுவதை கேட்க வேண்டும். மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு காசும் மீட்கப்படும். இது மோடியின் உத்தரவாதம்' என்று கூறியுள்ளார்.

மதுபான நிறுவன இடங்களில் பிடிபட்ட தொகை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என ஒடிசா மாநில பா.ஜனதாவும் வலியுறுத்தியுள்ளது.


Next Story