பழனி முருகன் கோவில்: கிரிவீதியில் தனியார் வாகனங்கள் செல்ல தடை


பழனி முருகன் கோவில்: கிரிவீதியில் தனியார் வாகனங்கள் செல்ல தடை
x
தினத்தந்தி 6 March 2024 3:06 AM GMT (Updated: 6 March 2024 6:24 AM GMT)

பழனி கிரிவலப் பாதையில் வரும் 8-ம் தேதி முதல் தனியார் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில் கிரிவீதியில், மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மேலும் ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக, பழனி முருகன் கோவில் கிரிவீதியில் அனைத்து தனியார் வாகனங்களும் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த இடைக்கால தீர்ப்பின் ஒரு பகுதியாக கிரிவீதியில் அனைத்து தனியார் வாகனங்கள் சென்று வரவும், நிறுத்தவும் வருகிற 8-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக மின் இழுவை ரெயில் நிலையங்கள், ரோப்கார் நிலையம், படிப்பாதை வரை கோவில் நிர்வாகம் மூலம் பேட்டரி கார், மினிபஸ் ஆகியவை கட்டணம் இன்றி இயக்கப்பட உள்ளது. மேலும் அனைத்து தனியார் வாகனங்களும் சுற்றுலா பஸ் நிலையம், கோசாலை பஸ்நிலையம் ஆகியவற்றில் கட்டணம் இல்லாமல் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பழனி கிரிவீதியில் வாகனங்கள் நுழைவதை தடுக்கும் வகையில் இணைப்பு சாலைகளில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது கிரிவீதியின் 6 இணைப்பு சாலைகளில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.


Next Story