பயணிகள் விமானம் இந்தியாவில் தயாரிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை - பிரதமர் மோடி
பயணிகள் விமானம் இந்தியாவில் தயாரிக்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார்.
பெங்களூரு,
பிரதமர் மோடி இன்று கர்நாடகா வந்துள்ளார். டெல்லியில் இருந்து காலை 11 மணிக்கு தனி விமானம் மூலம் கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வந்தார். சிவமொக்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ரூ.384 கோடி செலவில் 775 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் 3 ஆயிரத்து 200 மீட்டர் தூரத்திற்கு ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. சிவமொக்கா விமான நிலையத்தில் இரவில் விமானங்கள் தரையிறங்கும் வசதி இடம் பெற்றுள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள சிவமொக்கா விமான நிலையம் கர்நாடகத்தில், பெங்களூருவுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய விமான நிலையம் ஆகும்.
இந்நிலையில், சிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி கூறுகையில், வரும் காலங்களில் இந்தியாவுக்கு ஆயிரக்கணக்கான விமானங்கள் தேவைப்படும். பயணிகள் விமானம் இந்தியாவில் தயாரிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. இரட்டை எஞ்சின் அரசு வளர்ச்சியை கர்நாடகாவின் கிராமங்கள், டயர் 2, டயர் 3 நகரங்களுக்கும் கொண்டு செல்கிறது.
சிவமொக்காவில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் நகரங்களுக்கு இடையேயான இணைப்பை அதிகரிக்கும்' என்றார். கர்நாடகா வந்துள்ள பிரதமர் மோடி மேலும் பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.