நாடாளுமன்றத்தை வழிநடத்த ஒத்துழைப்பு அவசியம் - பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தை வழிநடத்த ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி,
18வது நாடாளுமன்றம் இன்று கூடியது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைந்த பின் முதல்முறையாக நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டு மக்கள் எங்களுக்கு பணியாற்ற 3வது முறையாக வாய்ப்பு அளித்துள்ளனர். இது சிறந்த, மிகப்பெரிய வெற்றி. எங்கள் பொறுப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. எங்கள் 3வது ஆட்சியில் நாங்கள் 3 மடங்கு கடினமாக உழைப்போம் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியாக கூறுகிறேன்.
நாட்டு மக்கள் எதிர்க்கட்சிகளிடமிருந்து நல்ல நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். ஜனநாயகத்தின் மரபை காத்து மக்களின் எதிர்பார்ப்புகளை எதிர்க்கட்சிகள் நிறைவேற்றும் என்று நம்புகிறேன். நாடகம், இடையூறுகளை மக்கள் எதிர்பார்க்கவில்லை. அமளி, கோஷங்களையும் மக்கள் விரும்பவில்லை. நாடாளுமன்றத்தை வழிநடத்த ஒத்துழைப்பு அவசியம். நாட்டிற்கு சிறந்த, பொறுப்பான எதிர்க்கட்சி அவசியம்
இவ்வாறு அவர் கூறினார்.