வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட சிறுமி, பிரதமர் மோடியுடன் கொஞ்சி விளையாடிய வைரல் வீடியோ
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட சிறுமி, பிரதமர் மோடியுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30ம் தேதி இரவு பயங்க நிலச்சரிவு, காட்டாறு வெள்ளம் ஏற்பட்டது. இதில், மலைப்பகுதியில் உள்ள சூரல்மலை, அட்டமலை, முண்டக்கை போன்ற கிராமங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன.
நிலச்சரிவில் மண்ணில் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் இதுவரை 418 பேர் உயிரிழந்தனர். மேலும், 131 பேரை காணவில்லை. அதேவேளை, இந்த பேரிடரில் வீடுகள் உடமைகளை இழந்த பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வயநாடு நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். மேலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களை நேற்று பார்வையிட்டபோது ஒரு சிறுமி பிரதமர் மோடியுடன் விளையாடிய நிகழ்வு தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளோரை பிரதமர் மோடி நலம் விசாரித்தார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் மகளான சிறுமியிடம் பிரதமர் மோடி பேசினார். அப்போது அந்த சிறுமி பிரதமர் மோடியின் முகத்தை பிடித்து கொஞ்சினார். மேலும், பிரதமர் மோடி அணிந்திருந்த கண்ணாடியையும் பிடித்து இழுந்து விளையாடினார். சிறுமியின் செயலை பிரதமர் மோடி புன்னகையுடன் ரசித்தார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.