பல்லாரி மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது - பசவராஜ் பொம்மை


பல்லாரி மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது - பசவராஜ் பொம்மை
x

நாடாளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி வெற்றி பெற்ற பின்பு அவர் பல்லாரிக்கு வரவில்லை என்றும், பல்லாரி மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

காங்கிரஸ் துரோகம்

பல்லாரியில் காங்கிரஸ் தலைவர்கள் பாதயாத்திரை நடத்துவதுடன், மாநாடும் நடத்தி உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பல்லாரி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்காக, மக்களை சந்தித்து வாழ்த்து கூட தெரிவிக்க பல்லாரிக்கு சோனியா காந்தி வரவில்லை. தன்னை தேர்தலில் வெற்றி பெற வைத்த மக்களை ஒரு மனிதாபிமான அடிப்படையில் வந்து சந்தித்துவிட்டு சென்றிருக்கலாம். அதுகூட சோனியா காந்தி செய்யவில்லை.

ரேபரேலி தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றிருந்ததால், அந்த தொகுதியின் எம்.பி.யாக இருந்து விட்டு, பல்லாரி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாகி இருந்ததை சோனியா காந்தி ராஜினாமா செய்திருந்தார். பல்லாரி மக்களுக்கு சோனியா காந்தியும், காங்கிரசும் துரோகம் செய்திருந்தது. தற்போது எந்த முகத்தை வைத்து கொண்டு பல்லாரியில் காங்கிரசார் பாதயாத்திரை நடத்துகிறார்கள். பல்லாரி மாவட்ட மக்கள் காங்கிரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

மக்கள் அமோக வரவேற்பு

காங்கிரஸ் ஆட்சியில் பல்லாரி வளர்ச்சிக்காக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக அறிவித்தார்கள். அது அறிவிப்பாகவே நின்றுவிட்டது. தற்போது தங்களது செல்வாக்கை உயர்த்தி கொள்ள பல்லாரியில் பாரத் ஜோடோ யாத்திரையையும், பொதுக்கூட்டத்தையும் நடத்துகிறீர்கள். இது பல்லாரி மக்களுக்கு தேவையில்லை. பா.ஜனதாவுக்கு எதிராக ராகுல்காந்தியை காங்கிரஸ் இறக்கி உள்ளது. இது பலமுறை தோல்வியே அடைந்துள்ளது. பா.ஜனதா சார்பில் நடைபெற்று வரும் மக்கள் சங்கல்ப யாத்திரைக்கு மக்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மக்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.

பா.ஜனதாவினராலும் நடந்து காட்ட...

மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து வருகிறோம். அடுத்த ஆண்டு(2023) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து பாருங்கள் என்று பா.ஜனதாவுக்கு சவால் விடுத்துள்ளார்.

எத்தனை கிலோ மீட்டர் வேண்டுமானாலும் பா.ஜனதாவினரால் நடந்து காட்ட முடியும். சித்தராமையா எனது சொந்த விவகாரம் பற்றி கூட பேசி இருக்கிறார். அவரை போன்று கீழ் இறங்கி பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story