மெட்ரோ ரெயில் திட்டத்தில் பிரதமர் மோடியின் பங்கு சிறிதளவு கூட இல்லை; மந்திரி ராமலிங்க ரெட்டி பேட்டி
மெட்ரோ ரெயில் திட்டத்தின் பிரதமர் மோடியின் பங்கு சிறிதளவு கூட இல்லை என்று மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.
பெங்களூரு:
மெட்ரோ ரெயில் திட்டத்தின் பிரதமர் மோடியின் பங்கு சிறிதளவு கூட இல்லை என்று மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.
பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் நேற்று போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்க ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
வேஷத்தை மாற்றி கொண்டு...
சிவமொக்கா மாவட்டத்தில் நடந்த வன்முறை குறித்து பா.ஜனதாவினர் தங்களது வாய்க்கு வந்ததை பேசி வருகின்றனர். ஒவ்வொரு தலைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பா.ஜனதா ஆட்சியில் இருந்த போது போலீசார் மாதிரி சட்டத்தை கையில் எடுத்து செயல்பட்டனர். தற்போது அதிகாரத்தில் இல்லாத போது தங்களது வேஷத்தை மாற்றி கொண்டு மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, மதக்கலவரத்தை தூண்டி விடுகிறார்கள்.
சமுதாயங்களுக்கு இடையில் மோதலை உருவாக்குவதும் பா.ஜனதாவினரின் வேலையாகும். காங்கிரஸ் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதே பா.ஜனதாவினரின் குணம் ஆகும். பெங்களூரு மெட்ரோ ரெயில் விவகாரத்தில் பா.ஜனதாவின் பங்கு எதுவும் இல்லை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது தான் பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்டம் அமல்படுத்தப்பட்டு இருந்தது.
பிரதமர் பங்கு இல்லை
ஆனால் மெட்ரோ ரெயில் திட்ட தொடக்க விழாவுக்கு காங்கிரஸ் தடையாக இருந்ததாக தற்போது மக்களிடம் பா.ஜனதாவினர் அவப்பிரசாரம் செய்து வருகிறார்கள். பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பங்கு சிறிதளவு கூட இல்லை. மத்திய அரசு சிறிதளவு நிதி உதவி வழங்கியதை தவிர்த்து, வேறு எதுவும் செய்யவில்லை. மெட்ரோ ரெயில் திட்டத்தை அமல்படுத்தி, செயல்படுத்தி வருவது அனைத்தும் மாநில அரசே ஆகும்.
நாடு மற்றும் மாநில வளர்ச்சிக்காக பா.ஜனதாவினர் எதுவும் செய்வதில்லை. திட்டங்களின் பெயர்களை மாற்றுவது மட்டுமே பா.ஜனதாவின் வேலை ஆகும். நாட்டில் எங்கு வளர்ச்சி பணிகள் முடிந்திருந்தாலும், அங்கு தங்களது பெயரை சேர்த்து கொண்டு நாங்கள் செய்தோம் என்பதை மட்டும் பா.ஜனதாவினர் செய்து வருகின்றனர். போக்குவரத்து துறையில் நடந்த சில முறைகேடுகள் பற்றி எனது கவனத்திற்கும் வந்தது. அதுபற்றிய உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.