பிரதமர் மோடி பிறப்பால் ஓ.பி.சி. இல்லை என ராகுல் காந்தி பேச்சு - பா.ஜ.க. மறுப்பு


பிரதமர் மோடி பிறப்பால் ஓ.பி.சி. இல்லை என ராகுல் காந்தி பேச்சு - பா.ஜ.க. மறுப்பு
x

பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் இல்லை என ராகுல் காந்தி கூறியிருந்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரை 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' மேற்கொண்டு வருகிறார். தற்போது ஒடிசா மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அங்கு மக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர், "பிரதமர் மோடி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்(ஓ.பி.சி.) பிறந்ததாக மக்களை ஏமாற்றி வருகிறார். அவர் பிறப்பால் ஓ.பி.சி. இல்லை. பொதுப் பிரிவில் இருந்த 'தெலி' சாதியில்தான் மோடி பிறந்தார். அவர் குஜராத் முதல்-மந்திரியாக பதவியேற்ற பிறகுதான் அவரது சாதி ஓ.பி.சி.யில் சேர்க்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இது உண்மை அல்ல. பிரதமர் நரேந்திர மோடியின் சாதி, அவர் குஜராத் முதல்-மந்திரியாக பதவியேற்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 27, 1999 அன்று ஓ.பி.சி.யாக அறிவிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.


Next Story