விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் பாதிப்பு; பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு
பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டு உள்ள ஜி.எஸ்.டி. வரி, விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.
குறிப்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பிரதமர் மோடியை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில் மீண்டும் அவர் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடி பேச்சு
ஆந்திராவின் பீமாவரத்தில் விடுதலை போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் சிலையை சமீபத்தில் திறந்து வைத்த பிரதமர் மோடி, ஆங்கிலேயரை நோக்கி அல்லூரி சீதாராம ராஜூ எழுப்பிய போர்க்குரலான 'துணிவு இருந்தால் என்னை தடுத்துப்பாருங்கள்' என்ற வாசகத்தை நினைவு கூர்ந்து பேசியிருந்தார். அதாவது, பல சவால்கள் மற்றும் சிரமங்களை தைரியமாக எதிர்கொள்வதால், நாட்டு மக்கள் இப்போது 'துணிவு இருந்தால் தடுத்துப்பாருங்கள்' என்ற இதே கோஷத்தை பயன்படுத்துவதாக குறிப்பிட்டு இருந்தார். இதை குறிப்பிட்டு ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
இப்போதாவது நிறுத்துங்கள்
பா.ஜனதா ஆட்சியில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 157 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டிருக்கிறது.
மோடி அரசின் கப்பார் வரி (ஜி.எஸ்.டி) கொள்ளை, வேலையில்லா திண்டாட்ட சுனாமி போன்றவை நாட்டை கடுமையாக தாக்கி இருக்கிறது.
நாட்டின் 133 கோடி மக்கள் தங்கள் ஒவ்வொரு தடங்கலின்போதும், 'துணிவு இருந்தால் எங்களை தடுத்துப்பாருங்கள்' என கூறுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உண்மையில், 'நீங்கள் (பிரதமர்) ஏற்படுத்தி வரும் இத்தகைய தடைகள் எங்களை முடக்கி விட்டது. எனவே இப்போதாவது நிறுத்துங்கள்' என்று பிரதமரை பார்த்துதான் மக்கள் கூறுகிறார்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார்.