ராஜஸ்தான்: சுக்தேவ் சிங் கொலை வழக்கு... கனடாவில் இருந்து போடப்பட்ட திட்டம்


ராஜஸ்தான்: சுக்தேவ் சிங் கொலை வழக்கு... கனடாவில் இருந்து போடப்பட்ட திட்டம்
x

Image Courtesy : PTI

கொலை சம்பவத்தில் மூளையாக இருந்து செயல்பட்ட ரோஹித் கோதாரா கனடாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி. இவர் ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் 3 பேர் அவரது வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுக்தேவ் சிங் கோகமெடியும், அவருடன் இருந்த நவீன் சிங் ஷெகாவத் என்பவரும் உயிரிழந்தனர்.

அதே சமயம் சுக்தேவ் சிங் கோகமெடியின் பாதுகாவலர்கள் சுட்டதில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்ற 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ராஜபுத்திர இளைஞர் அமைப்பின் தலைவர் வீடு புகுந்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு ராஜபுத்திர சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, சுக்தேவ் சிங் கோகமெடி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரோகித் ரத்தோர் மற்றும் நிதின் பவுஜி உட்பட மூன்று குற்றவாளிகளை சண்டிகரில் வைத்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பான பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ராஜபுத்திர அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூளையாக இருந்து செயல்பட்டவர் ரோஹித் கோதாரா என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர் கனடாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய கோல்டி பிரார் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆகியோரின் குழுக்களுடன் ரோஹித் கோதாரா நெருங்கிய தொடர்பில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ராஜபுத்திர அமைப்பின் தலைவரை கொலை செய்வதற்கான ஆட்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பை விரேந்திர சரண் என்ற நபரிடம் ரோஹித் கோதாரா வழங்கியுள்ளார். ரோஹித் கோதாரா பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் கைதாகி ராஜஸ்தானின் அஜ்மீர் சிறையில் இருந்தபோது விரேந்திர சரணை சந்தித்துள்ளார்.

விரேந்திர சரண் கொலையாளிகளை ஏற்பாடு செய்துவிட்டு, அவர்களுக்கு துப்பாக்கிகளையும் சப்ளை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story