உதயசூரியன் சின்னம் விவகாரம்: தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு எதிரான மனு தள்ளுபடி


உதயசூரியன் சின்னம் விவகாரம்: தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு எதிரான மனு தள்ளுபடி
x

கோப்புப்படம்

வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது, தமிழ்நாட்டில் சில தி.மு.க. கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றன. இதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், 'தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியில் இருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது. இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'அரசியலமைப்புச் சட்டம் 329-வது பிரிவின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியின் தேர்தலை எதிர்த்து தேர்தல் வழக்குதான் தொடர முடியும்' என்று கூறி, வழக்கை முடித்துவைத்தனர்.

இந்த உத்தரவுக்கு எதிராக எம்.எல்.ரவி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்தவுடன் தேர்தல் வழக்காகவே தாக்கல் செய்ய முடியும் என்றும் கருத்து தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Next Story