ஆண்டுக்கு ரூ.1 லட்சம், அரசு வேலைகளில் 50 சதவீத ஒதுக்கீடு.. பெண்களுக்கு வாக்குறுதிகளை வாரி வழங்கிய ராகுல் காந்தி


ஆண்டுக்கு ரூ.1 லட்சம், அரசு வேலைகளில் 50 சதவீத ஒதுக்கீடு.. பெண்களுக்கு வாக்குறுதிகளை வாரி வழங்கிய ராகுல் காந்தி
x

இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் ஒரு பகுதியாக, மராட்டிய மாநிலம் துலே மாவட்டத்தில நடந்த மகளிர் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார்.

துலே:

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வாரி வழங்கத் தொடங்கி உள்ளன. அவ்வகையில், காங்கிரஸ் கட்சியும் பல்வேறு பொதுக்கூட்டங்கள் வாயிலாக வாக்குறுதிகளை வழங்கி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் ஒரு பகுதியாக மராட்டிய மாநிலம் துலே மாவட்டத்தில் இன்று நடந்த மகளிர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பெண்களுக்கான ஐந்து வாக்குறுதிகளை வழங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். இந்த தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும்.

ஆஷா, அங்கன்வாடி மற்றும் மதிய உணவு திட்ட பெண் ஊழியர்களுக்காக, மத்திய பட்ஜெட்டில் நிதி இரு மடங்காக உயர்த்தப்படும். பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் வழக்குகளை எதிர்த்து போராடுவது குறித்து வழிகாட்டுவதற்கு ஒரு நோடல் அதிகாரி நியமிக்கப்படுவார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கான விடுதிகள் அமைக்கப்படும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.


Next Story