கேரள அரசு ஒத்துழைக்காததால் சபரிமலை ரெயில் திட்டங்கள் தாமதம் - மக்களவையில் ரெயில்வே மந்திரி தகவல்


கேரள அரசு ஒத்துழைக்காததால் சபரிமலை ரெயில் திட்டங்கள் தாமதம் - மக்களவையில் ரெயில்வே மந்திரி தகவல்
x

கோப்புப்படம்

சபரிமலை ரெயில் திட்டத்துக்கு 2 மாற்று வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் சபரிமலை ரெயில் திட்டம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர், "கேரளாவில், ரெயில்வே கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. சபரிமலை ரெயில் திட்டம், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ரெயில் வசதி அளிப்பதை நோக்கமாக கொண்டது.

ஆனால், பல ஆண்டுகளாக முயற்சி செய்த போதிலும், அத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதிலும், தனது பங்கு நிதியை அளிப்பதிலும் கேரள அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால், உண்மையில் சபரிமலை ரெயில் திட்டம் அடைந்திருக்க வேண்டிய முன்னேற்றத்தை அடையவில்லை.

தற்போது, சபரிமலை ரெயில் திட்டத்துக்கு 2 மாற்று வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு வழித்தடம், அய்யப்பன் கோவிலுக்கு மிக அருகில் முடிவடையும்.

மற்றொரு வழித்தடம், கோவிலுக்கு 25 கி.மீ.க்கு முன்பே முடிவடைந்து விடும். 2 வழித்தடங்களையும் முழுமையாக ஆய்வு செய்த பிறகு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

செங்கானூரில் இருந்து பம்பை வரையிலான ரெயில் பாதை, ஒரு புதிய வழித்தடம். அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

சரியான வழித்தடத்தை தேர்வு செய்து, விரிவான திட்ட அறிக்கையும் முடிவடைந்தவுடன், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


Next Story