டெல்லியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
கனமழை காரணமாக டெல்லியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று கனமழை பெய்தது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 153 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 2 முதல் 3 நாட்கள் வரை டெல்லியில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் டெல்லியின் பல பகுதிகளில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசுத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, நிவாரண பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கனமழை குறித்து வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து, டெல்லியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.