கார்வார் அருகே என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு நடுக்கடலில் ஆராய்ச்சி கப்பல் தத்தளிப்பு;


கார்வார் அருகே என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு நடுக்கடலில் ஆராய்ச்சி கப்பல் தத்தளிப்பு;
x

கார்வார் அருகே என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ஆராய்ச்சி கப்பல் நடுக்கடலில் தத்தளிக்கிறது. அதில் இருந்த 8 விஞ்ஞானிகள் உள்பட 36 பேர் மீட்கப்பட்டனர். அந்த கப்பலை பத்திரமாக கோவாவுக்கு மீட்டு செல்ல முயற்சி நடக்கிறது.

பெங்களூரு:

கார்வார் அருகே என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ஆராய்ச்சி கப்பல் நடுக்கடலில் தத்தளிக்கிறது. அதில் இருந்த 8 விஞ்ஞானிகள் உள்பட 36 பேர் மீட்கப்பட்டனர். அந்த கப்பலை பத்திரமாக கோவாவுக்கு மீட்டு செல்ல முயற்சி நடக்கிறது.

கடல் ஆராய்ச்சி கப்பல்

இந்திய அரசின் கடலோர காவல்படை சார்பில் கடலை ஆராய்ச்சி செய்வதற்காக சிந்து சாதனா என்ற ஆராய்ச்சி கப்பல் மூலம் கடல் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவா மாநிலம் பனாஜியில் இருந்து அரபிக்கடலில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் நோக்கி ஆராய்ச்சி கப்பல் நேற்று முன்தினம் புறப்பட்டது.

நடுக்கடலில் தத்தளிப்பு

அந்த கப்பலில் 8 விஞ்ஞானிகள், சிப்பந்திகள் உள்பட 36 பேர் பயணம் செய்தனர். கார்வாரில் இருந்து 20 கடல்மைல் தொலைவில் வந்த போது அந்த ஆராய்ச்சி கப்பலின் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த கப்பல் நடுக்கடலில் தத்தளித்தது.

இதனால் அதில் இருந்த விஞ்ஞானிகள் உள்பட 36 பேரும் பரிதவித்தனர். இதையடுத்து அவர்கள் கோவா கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே கடலோர காவல் படையினர் விரைந்து சென்று, நடுக்கடலில் என்ஜின் பழுதால் தத்தளித்த கப்பலில் இருந்த 36 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

மீட்பு பணி தீவிரம்

மேலும் பழுதான கப்பல் நீரில் மூழ்க தொடங்கியது. உடனே சுதாரித்துக்கொண்ட கடலோர காவல் படையினர் அந்த ஆராய்ச்சி கப்பலை மீட்டு கோவா கொண்டு செல்லும் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அந்த ஆராய்ச்சி கப்பலில் விலையுயர்ந்த ஆராய்ச்சி கருவிகள், ரசாயனங்கள் இருக்கிறது.

அந்த கப்பல் கடலில் மூழ்கும் பட்சத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடல் மாசுபடுவதுடன், கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த கப்பலை மிகுந்த பாதுகாப்புடன் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோவாவுக்கு கொண்டு செல்ல முயற்சி

இதுகுறித்து கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், அதிநவீன ஆராய்ச்சி கப்பலில் 8 விஞ்ஞானிகள் உள்பட 36 பேர் இருந்தனர். விலை உயர்ந்த தொழில்நுட்ப உபகரணங்கள், ஆராய்ச்சி பற்றிய ஆவணங்களும் அந்த கப்பலில் உள்ளன. கப்பலின் என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆராய்ச்சி கப்பலில் கார்வார் அருகே 20 கடல்மைல் தொலைவில் தத்தளித்தது. தகவல் அறிந்ததும் உடனே சென்று விஞ்ஞானிகள் உள்பட அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளோம்.

மேலும் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்தால் கார்வார் கடல்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் அந்த கப்பலை பத்திரமாக கோவா கொண்டு செல்ல முயற்சி நடக்கிறது என்றார்.


Next Story