சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜனதா போர்க்கொடி


சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜனதா போர்க்கொடி
x

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நாயுடன் ஒப்பிட்டு பேசியதற்காக சித்தராமையாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நாயுடன் ஒப்பிட்டு பேசியதற்காக சித்தராமையாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

நாயுடன் ஒப்பிட்டு பேச்சு

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரசை சேர்ந்த சித்தராமையா இருந்து வருகிறார். கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் பல்லாரியில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

பிரதமர் மோடியின் முன்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நாய் குட்டியை போல் நடுங்கி நிற்கிறார். பா.ஜனதாவினர் நடுங்குகிறார்கள். 15-வது நிதி கமிஷன், கர்நாடகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

ஆனால் அந்த தொகையை தன்னால் வழங்க முடியாது என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். பா.ஜனதாவினர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதுகுறித்து பகிரங்க விவாதத்திற்கு பா.ஜனதா தலைவர்கள் தயாரா?. வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைவது உறுதி. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

நம்பிக்கையான விலங்கு

சித்தராமையாவின் இந்த கருத்துக்கு பா.ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சித்தராமையாவின் கருத்துக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில் கூறியுள்ளார். பல்லாரியில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

என்னை நாயுடன் ஒப்பிட்டு சித்தராமையா பேசியுள்ளார். இது அவரது கலாசாரத்தை காட்டுகிறது. நாய் நன்றியுள்ள நம்பிக்கையான விலங்கு. அதே போல் நான் கர்நாடக மக்களுக்கு நம்பிக்கையுடன் சேவையாற்றுவேன். அதனால் நாய் என்று என்னை அழைத்தாலும், அதை நேர்மறையாக எடுத்து கொள்வேன். மக்களின் நலனுக்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.

உடைக்க மாட்டேன்

சித்தராமையாவை போல் நான் சமூகங்களை உடைக்க மாட்டேன். வளர்ச்சி குறித்து விவாதிக்க சரியான மேடை சட்டசபை தான். அங்கு அனைத்து விஷயங்கள் குறித்தும் நான் பகிரங்க விவாதத்திற்கு தயாராக உள்ளேன். வருகிற ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் விவாதத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

எதிர்ப்பு வலுக்கிறது

இந்த நிலையில் பசவராஜ்பொம்மை பற்றிய சித்தராமையாவின் கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவருக்கு மந்திரிகள் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சித்தராமையா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறும்போது, "முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பிரதமர் மோடி முன்பு நாய்க்குட்டி போல் நடுங்குவதாக கூறியுள்ளார். இதன் மூலம் அவர் முதல்-மந்திரி பதவியை அவமதித்துவிட்டார். சோனியா காந்தி முன்பு அவர் எந்த மாதிரி நடந்து கொள்கிறார்.டி.கே.சிவக்குமார் இருக்கும்போது அவர் எப்படி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் அதே போல் கீழ்த்தரமாக பேச விரும்பவில்லை. அதனால் சித்தராமையா, முதல்-மந்திரி குறித்து கூறிய கருத்துக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

நான் எதிர்பார்க்கவில்லை

போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு பல்லாரியில் நிருபர்களிடம் கூறும்போது, "முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குறித்து தரம் தாழ்ந்து பேசியுள்ளார். சோனியா காந்தி முன்பு அவர் எலி, பூனை போல் நடுங்குகிறார் என்று நாங்களும் கூற முடியும். ஆனால் அது எங்களின் கலாசாரம் கிடையாது. சித்தராமையா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "முதல்-மந்திரி பதவி அரசியல் சாசன பதவி. அதற்கு மரியாதை கொடுப்பது ஒவ்வொருவரின் கடமை. மூத்த தலைவரான சித்தராமையாவிடம் இருந்து இத்தகைய கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. சோனியா காந்தி முன்பு கைகட்டி நின்றபோது, சித்தராமையாவின் சுயமரியாதை எங்கே போனது?. சித்தராமையா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

வயது, அனுபவம்

விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கூறும்போது, "முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நாயுடன் ஒப்பிட்டு சித்தராமையா பேசியது சரியல்ல. இது அவரது மோசமான மனநிலையை காட்டுகிறது. பிரதமர் மோடிக்கு பசவராஜ் பொம்மை மாியாதை கொடுக்கிறார். உங்களை போல் சோனியா காந்தி முன்பு அடிமை போல் நடந்து கொள்வது இல்லை. சித்தராமையா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், "சித்தராமையா வயது, அனுபவம் என்ன, ராகுல் காந்தியின் வயது, அனுபவம் என்ன. அவருடன் சேர்ந்து சித்தராமையா ஓடுகிறார். அவர் முதல்-மந்திரி பதவிக்கு மரியாதை தராமல் தரம் தாழ்ந்து பேசுவது சரியல்ல. அவர் தனது கருத்துக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி வரும் சிலையில் முதல்-மந்திரி பற்றிய சித்தராமையாவின் இந்த கருத்து அரசியல் களத்தை சூடாக்கி வருகிறது. சித்தராமையாவை கண்டித்து போராட்டம் நடத்தவும் பா.ஜனதாவினர் திட்டமிட்டுள்ளனர்.


Next Story