கர்நாடகத்தில் ஊழல் பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய சபதம் ஏற்க வேண்டும் - சோனியா காந்தி


கர்நாடகத்தில் ஊழல் பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய சபதம் ஏற்க வேண்டும் - சோனியா காந்தி
x

கர்நாடகத்தில் ஊழல் பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய நீங்கள் சபதம் ஏற்க வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.

வளர்ச்சி ஏற்படாது

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் உப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் மாற்றத்திற்கான நாள் நெருங்கிவிட்டது. இந்திரா காந்திக்கு சிக்கமகளூரு மக்கள் ஆதரவாக நின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் பல்லாரியில் போட்டியிட்டேன்.

அப்போது பல்லாரி மக்கள் என்னை ஆதரித்தனர். இந்த இருள் சூழ்ந்த நேரத்தில் மத்திய-மாநில பா.ஜனதா அரசுகளுக்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டியது அவசியம். சமுதாயத்தில் விரோதத்தை பரப்புகிறவர்களுக்கு எதிராக ராகுல் காந்தி ஒற்றுமை பாதயாத்திரை நடத்தினார். பா.ஜனதாவின் இந்த விரோத அரசியலுக்கு முடிவு கட்டாவிட்டால் நாட்டில் வளர்ச்சி ஏற்படாது.

ராகுல் காந்தியின் பாதயாத்திரையால் பா.ஜனதா பயந்துவிட்டது. இன்று ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்கு நல்லது செய்வதற்கு பதிலாக பணம் சம்பாதிக்கிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு நீங்கள் பா.ஜனதாவுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கவில்லை. ஆனாலும் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்தனர். அதன் பிறகு 40 சதவீத கமிஷன் வசூல் செய்து கர்நாடகத்தை கொள்ளையடித்து உள்ளனர்.

ஆசி கிடைக்காது

நாட்டில் இதற்கு முன்பு இத்தகைய மோசமான ஆட்சி நிர்வாகத்தை நீங்கள் பார்த்துள்ளீர்களா?.

ஜனநாயக முறை இப்படி தான் நடக்கிறதா?. தேர்தலில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்காவிட்டால் மோடியின் ஆசி கிடைக்காது என்று பகிரங்கமாக மிரட்டல் விடுக்கிறார்கள். பா.ஜனதா தோல்வி அடைந்தால் மாநிலத்தில் கலவரம் ஏற்படும் என்று சொல்கிறார்கள். கா்நாடக மக்களை நீங்கள் முட்டாள்கள் என்று நினைக்க வேண்டாம். கர்நாடக மக்களுக்கு பேராசை கிடையாது.

சபதம் ஏற்க வேண்டும்

இத்தகைய ஊழல் பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய நீங்கள் சபதம் ஏற்க வேண்டும். நீங்கள் மகான்களின் கொள்கைகள் மீது தாக்குதல் நடத்துகிறவர்களுக்கு ஆதரவாக நிற்கிறீர்களா? அல்லது அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக போராடுகிறவர்களின் பக்கம் நிற்கிறீர்களா? என்பதை முடிவு செய்ய வேண்டும். கர்நாடகத்தை கொள்ளையடிப்பவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். அதன் மூலம் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல வேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story