பிபிசி அலுவலகங்களில் 2வது நாளாக தொடரும் வருமானவரித்துறை ஆய்வு...!


பிபிசி அலுவலகங்களில் 2வது நாளாக தொடரும் வருமானவரித்துறை ஆய்வு...!
x

மும்பை, டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 2-வது நாளாக வருமானவரித்துறை ஆய்வு நடைபெற்று வருகிறது.

டெல்லி,

இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் செய்தி நிறுவனம் பிபிசி. இந்நிறுவனம் இந்தியாவிலும் ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் செய்தி வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை ஆகிய 2 இடங்களில் பிபிசி தனது அலுவலகங்களை அமைத்துள்ளது.

இந்த சூழ்நிலையில், பிபிசி செய்தி நிறுவனத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் நேற்று மதியம் முதல் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.

20 மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில் பிபிசி அலுவலகத்தில் உள்ள லேப்டாப்கள், ஆவணங்கள், ஊழியர்களின் செல்போன்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். லாபத்தை மடைமாற்றம் செய்து வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

வருமான வரித்துறையினர் ஆய்வு நடைபெற்று வருவதால் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற பிபிசி செய்தி நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனிடையே, பிபிசி செய்தி நிறுவனம் மீது வருமான வரித்துறை ஆய்வு நடத்தி வரும் சூழ்நிலையில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேவேளை, பிபிசி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளை நெருக்கமாக கண்காணித்து வருவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, குஜராத் கலவரம் குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற பெயரில் வெளியான இந்த ஆவணப்படம் குஜராத் கலவரத்திற்கு அப்போதைய முதல்-மந்திரியும், இப்போதைய பிரதமருமான நரேந்திரமோடி தான் நேரடிப்பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியிருந்தது.

அதேபோல், இந்தியா: மோடி கேள்விகள் என்ற பெயரில் பிபிசி வெளியிட்ட 2வது ஆவணப்படத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து, குடியுரிமை திருத்தச்சட்ட போராட்டம், டெல்லி வன்முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை விமர்சித்து பிபிசி கருத்து வெளியிட்டிருந்தது. இந்த ஆவணப்படங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story