மதுபோதையில் தாயை தாக்கிய தந்தை: விரக்தியில் மகள் தீக்குளித்து தற்கொலை


மதுபோதையில் தாயை தாக்கிய தந்தை: விரக்தியில் மகள் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 27 April 2024 6:01 PM IST (Updated: 27 April 2024 6:07 PM IST)
t-max-icont-min-icon

தந்தை தினமும் மதுகுடித்துவிட்டு போதையில் தாயை தாக்கியதால் விரக்தியடைந்த மகள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் கார்கொன் மாவட்டம் ராவத் பலசியா கிராமத்தை சேர்ந்தவர் சவுகான். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பூஜா (வயது 17) பிளஸ் 2 படிப்பை முடித்துள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வில் பூஜா 74 சதவிகித மதிப்பெண் எடுத்துள்ளார்.

இதனிடையே, மதுபோதைக்கு அடிமையான சவுகான் தினமும் குடித்துவிட்டு போதையில் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, மது குடிப்பதை நிறுத்தும்படியும், தாயை தாக்க வேண்டாம் எனவும் பூஜா தனது தந்தையிடம் அடிக்கடி கூறியுள்ளார். ஆனால், மகளின் பேச்சை கேட்காமல் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் சவுகான் தன் மனைவியை தொடர்ந்து தாக்கியுள்ளார். இதனால், சவுகான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பூஜா தனது தாயுடன் சேர்ந்து போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், தாயார் மீது தந்தை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததால் விரக்தி அடைந்த பூஜா நேற்று மாலை தனது வீட்டின் மொட்டை மாடியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன் பூஜா எழுதிவைத்த கடிதத்தில், தந்தை மதுகுடித்துவிட்டு தினமும் தாயை தாக்குகிறார். இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பூஜாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை மது குடித்துவிட்டு தாயை தாக்கியதால் விரக்தியில் மகள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story