தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 63.94% வாக்குகள் பதிவு


தினத்தந்தி 30 Nov 2023 7:00 AM IST (Updated: 30 Nov 2023 6:20 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ந்தேதி நடைபெறுகிறது.

ஐதராபாத்,

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில், முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.), பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இதுதவிர, ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளும் போட்டியை சந்திக்கின்றன.

இதில், நக்சலைட்டுகள் பாதிப்பு காணப்படும் 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையும் வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

இந்த தோ்தலில் முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி உள்பட மொத்தம் 2,290 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவர்களில் 221 பேர் பெண்கள். திருநங்கை ஒருவரும் போட்டியிடுகிறார். மொத்தமுள்ள 35,655 வாக்கு மையங்களில், 3.17 கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ந்தேதி நடைபெறுகிறது.

Live Updates

  • 30 Nov 2023 6:20 PM IST

    தெலுங்கானாவில் சட்டப்பேரவை வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 5 மணி வரை வாக்குச்சாவடியில் இருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அளித்து வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

    தெலங்கானா, ம.பி. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

  • 30 Nov 2023 3:41 PM IST

    திரிபுரா ஆளுநர் இந்திர சேனா ரெட்டி நல்லு மற்றும் அவரது மனைவி ரேணுகா ஐதராபாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். 

  • 30 Nov 2023 3:35 PM IST

    நடிகர் மகேஷ் பாபு ஐதராபாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.


  • 30 Nov 2023 3:21 PM IST

    நடிகர் பிரம்மானந்தம் ஐதராபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த போது செய்தியாளர்களிடம் கூறுகையில், "தயவுசெய்து வாக்களியுங்கள்," என்று தெரிவித்துவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

  • 30 Nov 2023 2:47 PM IST

    நடிகர் மனோஜ் மஞ்சு ஹைதராபாத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:- வாக்களிப்பது நமது உரிமையும் கடமையும் ஆகும். வாக்குப்பதிவு குறைவாக இருப்பதால் மக்கள்  வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

  • 30 Nov 2023 2:27 PM IST

    பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.68 சதவீத வாக்காளர்கள் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஓரிரு இடங்களில் நடந்த சிறு சிறு மோதல்கள் தவிர, வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றுவருவதாக தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் கூறினார்.  

    ◾️ அதிக அளவில் மெதக் மாவட்டத்தில் - 50.80 சதவீதம்

    ◾️ குறைந்த அளவில் ஹைதராபாத் - 20.79 சதவீதம்

  • 30 Nov 2023 1:52 PM IST


    தெலுங்கானாவில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியினர், தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அம்மாநில பாஜக தலைவரும் எம்.பியுமான ஜி கிஷன் ரெட்டி புகார் கடிதம் எழுதியுள்ளார்.

  • 30 Nov 2023 1:17 PM IST

    அரியானா மாநில ஆளுநர் பண்டாரு தத்தாரேயா, ஐதாராபாத்தில் தனது வாக்கினை செலுத்தினர். வாக்கு செலுத்திய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பண்டாரு தத்தாரேயா, கூறியதாவது:- 1983 ஆம் ஆண்டு முதல் நான் வாக்கு செலுத்தி வருகிறேன். நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வாக்களிப்பது மிக அவசியம்” என்றார்.


  • 30 Nov 2023 11:55 AM IST

    தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 20.64% வாக்குகள் பதிவாகியுள்ளது.


Next Story