'காங்கிரஸ் கட்சியை திவாலாக்க மோடி அரசு முயற்சிக்கிறது' - கே.சி.வேணுகோபால் குற்றச்சாட்டு


காங்கிரஸ் கட்சியை திவாலாக்க மோடி அரசு முயற்சிக்கிறது - கே.சி.வேணுகோபால் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 March 2024 8:08 AM GMT (Updated: 29 March 2024 8:26 AM GMT)

காங்கிரஸ் கட்சியை திவாலாக்கும் நோக்கத்துடன் பா.ஜ.க. அரசு செயல்படுவதாக கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 2018-19ம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் உள்பட காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி கடந்த 2017-18ம் நிதியாண்டு முதல் 2020-21ம் நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக சுமார் ரூ.1,750 கோடி செலுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"பொதுவாக அரசியல் கட்சிகளுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், வருமான வரியை தாக்கல் செய்வதில் தாமதம் என்ற பெயரில் தற்போது நோட்டீஸ் வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியை திவாலாக்கும் நோக்கத்துடன் நரேந்திர மோடி அரசு இதைச் செய்கிறது.

தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பதை அறிந்து, அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பா.ஜ.க. தாக்கி வருகிறது. இது ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கை ஆகும். இதை எதிர்த்து நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

எங்கள் கணக்குகள் முன்பு முடக்கப்பட்டன, இப்போது எங்கள் நிதி முடக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. எந்த வருமான வரியையும் செலுத்தவில்லை. ஆனால் அவர்களுக்கு வருமான வரித்துறையின் நோட்டீஸ் வழங்கப்படுவதில்லை."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story