சென்னை தொழில் அதிபரின்ரூ.30 லட்சம் நகைகள் திருட்டு


சென்னை தொழில் அதிபரின்ரூ.30 லட்சம் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 2 Sep 2023 6:45 PM GMT (Updated: 2 Sep 2023 6:46 PM GMT)

திருமண நிகழ்ச்சிக்கு வந்தபோது சென்னை தொழில் அதிபரின் ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய வாடகை கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

எலகங்கா:

திருமண நிகழ்ச்சிக்கு வந்தபோது சென்னை தொழில் அதிபரின் ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய வாடகை கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தொழில் அதிபர்

சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் பெங்களூருவுக்கு வந்தார். அவர் பெங்களூரு எலகங்கா நியூ டவுன் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வந்துள்ளார். அப்போது அவர் எலகங்காவில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் அவர் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு புறப்பட்டார். இதற்காக அவர் வாடகை கார் ஒன்றை முன்பதிவு செய்தார். அதன்படி நந்தேஷ் என்ற வாலிபர் வாடகை காரில் வந்தார்.

அவரது காரில் ஏறி தொழில் அதிபர் பயணம் செய்தார். அப்போது அவர் தனது பெட்டி மற்றும் பொருட்களை காரில் வைத்துவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது டிரைவர் நந்தேஷ் தொழில் அதிபரின் பெட்டி மற்றும் அதிலிருந்த பொருட்களுடன் மாயமாகி விட்டார். இதுகுறித்து தொழில் அதிபர் எலகங்கா நியூ டவுன் போலீசில் புகார் அளித்தார். அப்போது திருமண நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், தான் எடுத்து வந்த தங்க, வைர நகைகளை பெட்டியுடன் கார் டிரைவர் திருடி சென்றதாகவும் கூறினார்.

ரூ.30 லட்சம்

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கார் டிரைவர் நந்தேசை கைது செய்தனர். விசாரணையில் அவர் ராஜனகுண்டே பகுதியை சேர்ந்தவர் என்பதும், வாடகை கார் ஓட்டி வரும் நந்தேஷ் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டவர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் நந்தேசிடம் இருந்து 485 கிராம் தங்க, வைர நகைகளை மீட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.30 லட்சம் என போலீசார் கூறினர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story