பீகார்: லாரி மீது ஆட்டோ மோதி கோர விபத்து - 3 பேர் பலி
பீகாரில் அதிவேகத்தில் பயணித்த ஆட்டோ லாரி மீது மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததோடு 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பாட்னா,
பீகார் மாநிலம் சோன்பார்சா ரெயில்வே நிலையத்தில் நேற்று இரவு ஆட்டோ ஒன்று 9 பேரை ஏற்றி கொண்டு மோகன்பூர் சவுக் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. சித்தமார்க்கி பகுதி அருகே சென்ற போது ஆட்டோ அதிவேகத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, எதிரில் வந்த லாரி மீது அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 6 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைதொடர்ந்து, இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் என்பதை கண்டறிவதற்காக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்டோ அதிவேகத்தில் பயணித்ததே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.