உ.பி.: மதுபோதையில் போலீஸ்காரர் துப்பாக்கி சூடு; ஆசிரியர் பலி
பிரகாஷ் ஆத்திரத்தில் தன்னிடம் இருந்த பணிக்கு பயன்பட கூடிய துப்பாக்கியை எடுத்து, ஆசிரியரான தர்மேந்திராவை நோக்கி சுட்டார்.
முசாபர்நகர்,
உத்தர பிரதேசத்தில் வாரணாசி நகரை சேர்ந்த கல்வி துறையை சேர்ந்த சிலர் குழுவாக உத்தர பிரதேச வாரிய தேர்வுக்கான விடைத்தாள்களை எடுத்து கொண்டு வாகனத்தில் சென்றனர்.
அந்த குழுவில், ஆசிரியரான தர்மேந்திர குமார், மற்றொரு ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் இருவர் இடம் பெற்றிருந்தனர். இவர்களுடன் வாரணாசி நகரை சேர்ந்த போலீஸ் குழு ஒன்றும் உடன் சென்றது.
இவர்கள் சென்றபோது, கல்லூரியின் வாசல் கதவு மூடப்பட்டு இருந்தது. இதனால், அவர்கள் அனைவரும் கல்லூரி வாசலுக்கு வெளியே வாகனத்தில் இருந்தபடி காத்திருந்தனர். அப்போது, தலைமை காவலரான சந்திர பிரகாஷ் என்பவர் மதுபோதையில், உடன் இருந்த மற்றவர்களிடம், புகையிலை வேண்டும் என கேட்டு கொண்டு இருந்துள்ளார்.
இதனால், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. அவர்களின் தூக்கமும் கெட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பிரகாசுக்கு தர்மேந்திரா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில், ஆத்திரத்தில் பிரகாஷ் தன்னிடம் இருந்த பணிக்கு பயன்பட கூடிய துப்பாக்கியை எடுத்து, தர்மேந்திராவை நோக்கி சுட்டார்.
இதனை எதிர்பாராத, தர்மேந்திரா துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து உள்ளார். அவரை அருகே இருந்தவர்கள், உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், தர்மேந்திராவின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. சிலர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த வழக்கில், மாவட்ட மாஜிஸ்திரேட் மல்லப்பா பங்காரி கூறும்போது, உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.25 லட்சம் வழங்கும் என அறிவித்துள்ளது என்று கூறினார்.