ஒழுங்காற்று குழு புதிய உத்தரவு: தமிழகத்திற்கு மேலும் காவிரி நீர் திறக்கப்படுமா? - முதல்-மந்திரி சித்தராமையா பதில்
ஒழுங்காற்று குழு புதிய உத்தரவால் தமிழகத்திற்கு மேலும் காவிரி நீர் திறக்கப்படுமா? என்பதற்கு முதல்-மந்திரி சித்தராமையா பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு:
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனால் தங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பது போல் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து மைசூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சித்தராமையா, 'காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு மேலும் 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக அறிந்தேன். இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். அதன் பிறகு உங்களிடம் முடிவை தெரிவிக்கிறேன்' என்றார்.