'பா.ஜ.க.வால் வேலைவாய்ப்பு வழங்க முடியாது என்பதை இளைஞர்கள் புரிந்து கொண்டனர்' - பிரியங்கா காந்தி


பா.ஜ.க.வால் வேலைவாய்ப்பு வழங்க முடியாது என்பதை இளைஞர்கள் புரிந்து கொண்டனர் - பிரியங்கா காந்தி
x

நாட்டில் படித்த வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பா.ஜ.க.வால் வேலைவாய்ப்பு வழங்க முடியாது என்பதை நாட்டில் உள்ள இளைஞர்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் (IHD) வெளியிட்ட இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024-ஐ மேற்கோள் காட்டி பேசிய அவர், இந்தியாவில் உள்ள மொத்த வேலையில்லாதவர்களில் 83% பேர் இளைஞர்கள் என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

"2000-ம் ஆண்டில் படித்த வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 35.2% ஆக இருந்தது. அது 2022-ல் 65.7% ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், 'வேலையின்மை பிரச்சனையை அரசால் தீர்க்க முடியாது' என்று கூறுகிறார். இதுதான் பா.ஜ.க. அரசின் உண்மை நிலை.

பா.ஜ.க.வால் வேலைவாய்ப்பை வழங்க முடியாது என்பதை இன்று நாட்டின் ஒவ்வொரு இளைஞர்களும் புரிந்து கொண்டுள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க காங்கிரஸ் கட்சி உறுதியான திட்டத்தை வகுத்துள்ளது. காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என்று காங்கிரஸ் உறுதியளிக்கிறது. டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பை முடித்த இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கான பயிற்சி பணி வழங்கப்படும்.

வினாத்தாள் கசிவுக்கு எதிராக புதிய கடுமையான சட்டத்தை காங்கிரஸ் கொண்டுவர உள்ளது. தொழில் முனைவோருக்காக 5,000 கோடி ரூபாய் தேசிய நிதி ஒதுக்கப்படும். காங்கிரஸ் அரசு வேலைவாய்ப்பு புரட்சி மூலம் நாட்டின் இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்தும். இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம். அவர்கள் வலுவாக இருந்தால் தான் நாடு வலுவாக இருக்கும்."

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.


Next Story