அபுதாபியில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தல்; விமானத்தின் கழிவறையில் ரூ.80 லட்சம் தங்கம் சிக்கியது


அபுதாபியில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தல்; விமானத்தின் கழிவறையில் ரூ.80 லட்சம் தங்கம் சிக்கியது
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:46 PM GMT)

அபுதாபியில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான தங்கம் விமானத்தின் கழிவறையில் சிக்கியது.

பெங்களூரு:

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அபுதாபியில் இருந்து வந்திறங்கிய விமானத்தில் வந்த பயணிகள், அவர்களது உடைமைகளை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள். ஆனால் எந்தவொரு பயணியிடமும் இருந்து தங்கம் கிடைக்கவில்லை. பின்னர் அந்த விமானத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த விமானத்தின் கழிவறையில் ஒரு பிளாஸ்டிக் பை கிடந்தது. அந்த பையை எடுத்து பார்த்த போது, அதற்குள் தங்கம் இருந்தது. அந்த தங்க கட்டியின் எடை ஒரு கிலோ 331 கிராம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.80 லட்சத்து 21 ஆயிரம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை வெளியே எடுத்து சென்றால் சிக்கி விடுவோம் என்று பயந்து கடத்தல்காரர் விட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story