சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் - 4 பெண்கள் உள்பட 7 பேர் கைது


சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் - 4 பெண்கள் உள்பட 7 பேர் கைது
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 59 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 148 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 2 பயணிகளை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் லேப்டாப்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் இருந்தன. சந்தேகத்தின்பேரில் அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து 900 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 2 பெண் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தபோது 8 தங்க வளையல்களை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து 766 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை வாலிபரை சந்தேகத்தின் பேரில் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். -

அதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த 645 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 2 பெண்களின் உடைமைகளில் தங்க நகைகள், தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்ததையும் சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து 837 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 பெண்கள் உள்பட 7 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 59 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 148 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பெண்கள் உள்பட 7 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story