பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் சென்ற நகைக்கடை ஊழியர்களை பட்டாக்கத்தியால் வெட்டி 1½ கிலோ நகை கொள்ளை


பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் சென்ற நகைக்கடை ஊழியர்களை பட்டாக்கத்தியால் வெட்டி 1½ கிலோ நகை கொள்ளை
x

வெங்கல் அருகே பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் சென்ற நகைக்கடை ஊழியர்களை பட்டாக்கத்தியால் தாக்கி 1½ கிலோ நகையை 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளை அடித்து சென்றனர்.

சென்னை

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமேஸ்வர்லால் (வயது 43). தங்க நகைகளை செய்து விற்பனை செய்யும் தொழில் அதிபர். இவர் சென்னை, நெற்குன்றத்தில் தங்க நகைகளை செய்யும் கடை ஒன்றையும், அடகு கடையையும் நடத்தி வருகிறார். மேலும், தங்க நகைகளை செய்து சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நகை கடைகளுக்கு தங்களது ஊழியர்கள் மூலம் சப்ளை செய்து வருகிறார்.

இவரது கடையில் வேலை செய்யும் சோகன் (23), காலுராம் (30) ஆகிய 2 பேரும் நேற்று காலை நகைகளை சப்ளை செய்ய நெற்குன்றத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

பூந்தமல்லி, நசரத்பேட்டை, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை உள்ளிட்ட கடைகளில் நகைகளை சப்ளை செய்து விட்டு வசூல் ஆன ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 1.400 கிலோ (175 பவுன்) தங்க நகைகளை பையில் வைத்து கொண்டு செங்குன்றம் நோக்கி சென்றனர்.

அப்போது தாமரைப்பாக்கம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் காரணி பேட்டை கிராமத்துக்கு அருகே வரும்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

உடனடியாக அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த பட்டா கத்திகளை காட்டி சோகன் மற்றும் காலூராமை மிரட்டி அவர்களிடமிருந்து நகை-பணம் வைத்திருந்த பையை கேட்டனர். பையை சோகன் தர மறுத்ததால் அவரது கையை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு பையை பறித்து கொண்டு தப்பினர்.

இதுகுறித்து அவர்கள் உடனடியாக வெங்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து தொழில் அதிபர் ராமேஸ்வர்லால் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story