காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் அறிவிப்பு
திருநெல்வேலி மக்களவைத்தொகுதியில் தி.மு.க. போட்டியிடாத நிலையில் அந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ந்தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 20-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளதால் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்தநிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க. - காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது.
திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, கிருஷ்ணகிரி, கரூர்,விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி. ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு கடந்தமுறை வழங்கிய திருச்சி, தேனி, ஆரணி தொகுதிகளுக்கு பதில் வேறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மக்களவைத்தொகுதியில் தி.மு.க. போட்டியிடாத நிலையில் அந்த தொகுதி காங்கிரஸ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகள்
வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, ஆரணி, அரக்கோணம், வேலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, ஈரோடு, பொள்ளாச்சி, தஞ்சை, தேனி, சேலம், நீலகிரி, பெரம்பலூர், தூத்துக்குடி, தென்காசி, கோவை ஆகிய 21மக்களவை தொகுதிகளில் தி.மு.க.நேரடியாக போட்டியிடுகின்றது.
* தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. வுக்கு திருச்சி மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் ம.தி.மு.க சார்பில் வைகோவின் மகன் துரைவைகோ போட்டியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
* நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.