ஓட்டேரியில் 100 பவுன் நகை, ரூ.13 லட்சம் கொள்ளை - பூட்டிய வீட்டை உடைத்து மர்ம மனிதர்கள் கைவரிசை


ஓட்டேரியில் 100 பவுன் நகை, ரூ.13 லட்சம் கொள்ளை - பூட்டிய வீட்டை உடைத்து மர்ம மனிதர்கள் கைவரிசை
x

சென்னை ஓட்டேரியில் பூட்டி கிடந்த வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை, ரூ.13 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

சென்னை

சென்னை ஓட்டேரி ஜமாலியா பகுதியைச் சேர்ந்தவர் தம்சுதீன் (வயது 71). இவருடைய மனைவி அஸ்ரின் பினா (63). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள். மகன்கள் இருவரும் ஜெர்மனியிலும், மகள் ரியாத்திலும் வசித்து வருகின்றனர்.

வயதான தம்பதிகள் மட்டும் ஜமாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஓட்டேரி ஸ்டாரன்ஸ் சாலையில் மற்றொரு வீடும் உள்ளது. இருவரும் அவ்வப்போது அந்த வீட்டில் சென்றும் தங்குவது வழக்கம். அதன்படி ஓட்டேரி ஸ்டாரன்ஸ் சாலையில் உள்ள வீட்டில் தம்சுதீன் தனது மனைவியுடன் தங்கி இருந்தார்.

இந்தநிலையில் ஜமாலியாவில் உள்ள அவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் தம்சுதீனுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து ஓட்டேரி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார், தம்சுதீன் வீட்டுக்குள் சென்று சோதனை செய்தனர். அதில் அந்த வீட்டில் யாரும் இல்லாமல் பூட்டி கிடப்பதை அறிந்த கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 100 பவுன் நகை, ரூ.13 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

அதே பீரோவில் பையில் தனியாக 50 பவுன் நகைவைத்திருந்தார்கள். ஆனால் அதனை கொள்ளையர்கள் கவனிக்கவில்லை. இதனால் அந்த நகைகள் தப்பியது.

சம்பவ இடத்தில் தடயவியல் துறை துணை சூப்பிரண்டு பஞ்சாட்சரம் தலைமையிலான போலீசார் தடயங்களை சேகரித்தனர். ேமாப்ப நாய் 'சிபா' வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து ஜமாலியா பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்புவரை ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதுபற்றி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Next Story